அடுத்த தலைமுறை
எப்போதுமே அடுத்த தலைமுறை பற்றிய பயம் பெற்றோர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. சக நண்பர்களோடு பேசும்போது அனைவரும் அப்படி ஒரு பயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அடுத்த தலைமுறை ஒழுங்காக இருப்பதே இல்லை, தன் அத்தனை அறிவையும் பெற்றோருடன் போட்டிபோட்டு வாதம் செய்யவே பயன்படுத்துகிறார்கள். வீட்டில் ஒரு வேலையையும் பகிர்ந்து கொள்வதில்லை, எல்லாவற்றுக்கும் எதிர் கேள்வி, நாமெல்லாம் நம் சிறு வயதில் இப்படியா பெற்றோரிடம் பேசி கொண்டிருந்தோம். இவர்களுக்கு நம்மிடம் பயம் என்பதே இல்லை, என்ற குற்றசாட்டு பெற்றோரிடம் உண்டு. அப்படி பேசும் பெற்றோர்களில் நானும் ஒருவன் தான். ஆனால் யோசித்து பார்த்தால், நாமும் நம் சிறு வயதில் அப்படியெல்லாம் பெற்றோர் சொல்வதை கேட்டு அப்படியே நடந்து கொண்டதில்லை. ஆனால் இன்று அறிவுரை சொல்லும் நிலையில் மட்டும், நாம் நம் பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்கிறோமோ, அப்படியே தான் நாமும் இருந்தோம் என்று எண்ண பழகி இருக்கிறோம். அடுத்த தலைமுறையோடு நம்மை ஒப்பிட்டால் கலாச்சாரம், வாழ்க்கை முறை சார்ந்து சில மாறுதல்களும், இடைவெளிகளும் இருக்கும் தான். நுட்பமாக சிந்தித்தால் அந்த இடைவெளி எல்லா தலைமுறையினருக்கும் உண்டு. நம் அப்பா, அம்மாவின் சிந்தனைக்கும், வாழ்க்கை முறைக்கும் ஒப்பிட்டால் நாம் பல விஷயங்களில் மாறி வந்திருப்போம்.
இங்கு மாணவர்கள் ஏழாம் வகுப்பில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கு செல்லவேண்டும். கீழ் நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு தான் அதிகபட்ச வகுப்பு என்பதால், ஆறாம் வகுப்பு மாணவர்களில் இருந்து மாணவ தலைவர் ஒவ்வொரு வருடமும் தேர்தெடுக்கப்படுவார். மாணவ தலைவர் போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து, பின்னர் போட்டியன்று அனைத்து மாணவர்கள் முன் பேச வேண்டும். அந்த பேச்சில் அந்த பதவிக்கு தன்னுடைய தகுதி, திறமை, தான் தலைவரானால் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எப்படி எல்லாம் உதவி செய்வேன் என்று விளக்க வேண்டும். பின்னர் அனைத்து மாணவர்களும் தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். என் மகன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவர்கள் பள்ளியிலும் மாணவர் தலைவருக்கான போட்டி நடந்தது. என் மகன் அவனும் பங்கேற்பதாக சொன்னான். உடனே நாங்கள் ஒரு தலைவர் எப்படியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும் என ஆலோசித்து எழுதி கொடுத்தோம். போட்டியன்று மாலை என்ன நடந்தது என்று கேட்டேன். தான் போட்டியில் தோற்று விட்டதாக சொன்னான். நான் சற்றே ஏமாற்றத்திற்கு உள்ளாகி, அவனை பார்த்து அப்படியா.. என்று சொல்லிவிட்டு, எத்தனை வாக்கு வித்தியாசத்தில் நீ தோற்றாய் என கேட்டேன். அவன் அதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நானே போட்டியில் வெற்றிபெற்ற அந்த பெண்ணுக்கு தான் வோட்டு போட்டேன் என்று சாதாரணமாக சொன்னான். நான் கடுப்பாகி, லூசாடா நீ? எந்த முட்டாளாவது அப்படி செய்வானா? பிறகு எதுக்கு போய் நீயும் போட்டி போட்டாய்? என்று வரிசையாக கேள்வி கேட்க, அவன் இல்லப்பா அந்த பெண் நான் பேசியதை விட நன்றாக பேசினாள். என்னை விட அவள் தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, அவளுக்கு வோட்டு போட்டேன் என்று கூறினான். அவன் பதிலை கேட்டவுடன் எனக்கு முதலில் எரிச்சல் தான் வந்தது, சிறிது நேரம் கழித்து உணர்தேன், நான் எவ்வளவு சுயநல மனதோடு உள்ளேன் என்று.
தமிழ்ப்பள்ளியில் சக பெற்றோரோடு அடுத்த தலைமுறை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் சொன்னார். பிள்ளைகள் எல்லாம் ஒழுங்கா தாங்க வளர்ராங்க, நாம நம்ம சராசரியான சுயநல மனநிலையை அவர்கள் மேல் திணித்து அவங்கள கெடுக்காம இருந்தா போதும் என்று. உண்மை தான்.
Superb Rajni. It’s true.
LikeLike