Rajinikanth J

May 15, 2022

கலையின் கடைசி நுட்பம் 

சிறு வயதில் ஆசிரியர் மாணவர் பற்றி ஏதேனும் பேச்சு வரும்போது பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன், ‘என்ன இருந்தாலும் குருவை மிஞ்ச முடியுமா.. அவரு வாத்தியாராச்சே எதாவது ஒரு வித்தையை வச்சிக்கிட்டு மிச்சத்தை தானே சொல்லிகொடுத்திருப்பாரு..’என்று. வீரக்கலை கற்க ஆரம்பித்த பிறகு, நமது மரபு கலைகள் அழிவதை பற்றி நண்பர்களுடனும், முத்த மாணவர்களுடனும் பேசும்போது , ஒவ்வொரு தலைமுறை ஆசிரியர்களும் தனக்கு தெரிந்த பாடங்களில் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொண்டு மீதியை தான் சொல்லிகொடுக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு தலை முறையிலும் ஒவ்வொரு பாடம் அழிந்து கொண்டே வந்துவிட்டது என்றும் சொல்ல கேட்டிருக்கிறேன். எதனால் இப்படி? இத்தனை வருடம் கழித்து அதை பற்றி பேசும்போது பல்வேறு எண்ணங்கள்.. இது சம்பந்தப்பட்ட கேள்விகளை இப்படி தொகுக்கலாம்.

  1. ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த பாடங்களில் ஒன்றை நிறுத்திக்கொண்டு மற்ற பாடங்களை தான் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்களா? 
  2. ஒரு ஆசிரியருக்கு தெரிந்த கடைசி பாடம் அல்லது நுட்பம் தான் கலையின் கடைசி பாடமா அல்லது நுட்பமா? 
  3. ஆசிரியர்களை மிஞ்சி மாணவர்களால் சிறப்பாக வர முடியாதா?
  4. வீர கலை பாடங்கள் என்பது நிலையானதா? 
  5. ஒரு கலையில் இது தான் கடைசி நுட்பம் என்று உள்ளதா என்ன?

ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த பாடங்களில் ஒன்றை நிறுத்திக்கொண்டு மற்ற பாடங்களை தான் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்களா?

தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். என்ன காரணம்? மாணவர்கள் தன்னை மிஞ்சி சென்று விட கூடாது என்ற எண்ணமாக இருக்குமா? கலையில் ஆர்வம் உள்ள ஒரு மாணவனை ஒரு பாடத்தை சொல்லிகுடுக்காமல் நிறுத்துவதன் மூலம் அவன் கற்கும் ஆர்வத்தை நிறுத்திவிட முடியுமா என்ன? அந்த குறிப்பிட்ட பாடத்தை நிறுத்தலாம், ஆனால் அந்த பாடத்தில் சொல்லப்பட்ட நுணுக்கங்களோ அல்லது கலையின் தரிசனமோ வேறு வழிகளில் கற்க முடியாதா என்ன? ஆர்வம் உள்ள ஒரு மாணவனுக்கு தான் படிக்கும் நூல்களில் உள்ள ஒரு வரி போதாதா… ஒரு விலங்கின் அசைவு போதாதா… யாரோ பேசி கேட்கும் ஒரு வார்த்தை போதாதா..திரை படங்களில் பார்க்கும் ஒரு சண்டை அல்லது நடன காட்சி உணர்த்தி  விடாதா…

இதையெல்லாம் தாண்டிய ஒன்று உண்டு. தான் சொல்லி கொடுத்த பாடத்தை அல்லது நுட்பத்தை தான் மகிழும் வண்ணம் அல்லது வியக்கும் வண்ணம்  ஒரு மாணவர் செய்தபிறகு அதற்கு அடுத்த பாடத்தையோ அல்லது நுட்பத்தையோ ஒரு ஆசிரியரால் சொல்லி கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன??? உண்மையில் கலையின் மேல் ஆர்வம் உள்ள ஒருவரால் அப்படி இருக்க முடியாது. தன்னை தாண்டி ஒருவர் வந்து விடக்கூடாது என்ற ஆசையிலும்  சமூகத்தில் தன் நிலையை தக்கவைத்து கொள்வதிலும், அதிக கவனமும் ஆர்வமும் உள்ளவர்கள் அப்படி செய்யலாம். அப்படி ஒரு மனநிலையில் இருக்கும் ஒருவர் புதிதாக எதை கற்க முடியும். தனக்கு தெரிந்த ஒன்று தான் கலையின் உச்சம் என்று தன்னை சுற்றி உள்ள நான்கு பேரிடம் சொல்லிக்கொள்ளலாம். கலையின் மீது பெரிதாக ஆர்வம் இல்லாதவர்கள் அதை கேட்டு தலையாட்டி கொண்டிருக்கலாம். ஆனால் கலையும், உலகமும் அவர்களை தாண்டி சென்றுகொண்டே இருக்கும். 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நாவல் வரிசையில் எழுதழல் நாவலில் ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான வரிகள்.

‘நான் அவனுடைய ஆசிரியன். எந்த எதிர்பார்ப்புமின்றி வாங்கும் கலத்தின் வல்லமையை மட்டுமே நோக்கி படைக்கலக்கல்வியை அளித்தேன். திறன்கொண்ட தோளர் எவருக்கும் அதை அளிக்காமலிருந்ததும் இல்லை” என்றார் பலராமர்’ – எழுதழல் – 60.

ஒரு ஆசிரியருக்கு தெரிந்த கடைசி பாடம் அல்லது நுட்பம் தான் கலையின் கடைசி பாடமா அல்லது நுட்பமா?

நிச்சயமாக இல்லை. தனிப்பட்ட ஒருவர் அப்படி இறுமாந்து சொல்லிக்கொள்ளலாம். ஒரு கலையில் இருக்கும் எல்லா பாட முறைகளும் எனக்கு தெரியும் என்று ஒருவர் சொல்லலாம். தன் வாழ்க்கை முழுவதும் தேடி தேடி கற்கலாம். ஆனால் அந்த பாடங்களுக்குள் ஒளிந்திருக்கும் நுட்பங்கள்  உருவாக்கும்  எண்ணற்ற  சாத்தியங்களை, அதில் இருந்து தோன்றும் புதிய வகைமைகளை அறிவது கடினம்.  பெரும்பாலானவர்களுக்கு ஆரம்பத்தில் இருக்கும் கற்கும் ஆர்வம் பிறகு இருப்பதில்லை. குறிப்பாக மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கு ஆசிரியர் என்ற அங்கீகாரம் சமூகத்தில் கிடைத்த பிறகு பயிற்சி செய்வதையும், கற்பதையும் பெரும்பாலான ஆசிரியர்கள் செய்வதில்லை. தான் ஏற்கனவே கற்றவற்றை வைத்து சமாளிக்கிறார்கள். அப்படி இருந்தால் கலையை கற்கும் மாணவர்களுக்கு அளந்து அளந்து தான் கொடுக்கமுடியும். மாணவர்களுக்கு தெரியாத ஒன்று தனக்கு தெரியும் என்று நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்கொண்டிருக்க முடியும்.

 பெரும்பாலான மாணவர்கள் கலையின் மேல் உள்ள ஆர்வத்தில் கற்க சேர்ந்து பின்னர் கலையை விட ஆசிரியரின் மேலும், தான் கற்கும் பள்ளியின் மேலும் அதிக ஆர்வம் கொண்டு வேறெங்கும் கற்க முயலாமல் இருக்கும் இடத்திலேயே நின்று விடுவார்கள்.

ஆசிரியர்களை மிஞ்சி மாணவர்களால் சிறப்பாக வர முடியாதா?

ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்றவர்கள் எல்லாம் அப்படி தாண்டி வந்தவர்கள் தானே. அப்படி ஒருவர் சாதனையை இன்னோருவர் தாண்டி வந்தால் தானே வளர்ச்சி என்பதே நிகழமுடியும். கலையும் வளரும்.

ஒரு ஆசிரியருக்கு தன் மாணவன் தன்னை விட திறமையாக வருவதை பார்ப்பதை விட வேறு மகிழ்ச்சி உண்டா என்ன? ஒரு மாணவன் சிறப்பாக வரவேண்டும் என்பதற்கு தானே அத்தனை பயிற்சிகளும். இன்று ஒரு கைபேசியை புதிதாக கண்டுபிடிக்க முயல்பவர் இன்று இருக்கும் கைபேசியில் இருந்து மேலதிகமாக ஒன்றை செய்வாரே தவிர, கைபேசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்ததை  விட சிறப்பாக ஒன்றை செய்ய முயலமாட்டார். அது போலத்தான் ஒரு ஆசிரியர் தான் கற்றதில் இருந்து மேலதிகமாக ஒன்றை தன் மாணவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்வார். அந்த மேலதிக பயிற்சியே மாணவர்களின் அடிப்படையாக அமைந்து விடும். அந்த அடிப்படையில் இருந்து மேலெழும் மாணவர்கள் ஆசிரியரை விட திறமையாக வருவது தான் இயல்பு.

வீர கலை பாடங்கள் என்பது நிலையானதா ?

கற்கும் அடிப்படை நுட்பங்கள் நிலையானதாக இருக்கலாம். ஆனால் பாட முறைகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறிது சிறிதாக மாற்றம் அடைந்தே வந்திருக்கும். அப்படி எல்லாம் மாறி வரவில்லை என்று யாரேனும் சொன்னால் , தவறு இல்லை. மாறவில்லை என்றே கொள்வோம். ஆனால் மாறினாலும் தவறு இல்லை என்று தான் நான் கருதுகிறேன். அடிப்படை நுட்பங்களில் கூட நாம் புதியவற்றை சேர்க்கலாம், அது நம் கலையை உலக தரத்தில் உயர்த்த உதவும். இது எல்லா கலைக்கும் பொருந்தும். எல்லா கலையிலும் மாற்றம் என்பது இன்றியமையாதது.

ஒரு கலையில் இது தான் கடைசி நுட்பம் என்று உள்ளதா என்ன?

அப்படி ஒன்று எந்த கலையிலும் இல்லை. நம்மை வெற்றி கொள்பவர் வேறு ஒருவரிடம் தோற்கும் போது கலை வேறொரு பரிமாணத்தில் உயர்ந்து வெளிப்படுகிறது. நண்பர்களே, சமமாக பயிற்சி செய்த இருவர் மோதும் போது யார் வெற்றி பெறுவார் என்று யாருக்கு தெரியும்?

தொடர் வெற்றிகள் பெற்று உச்சாணி கொம்பில் இருக்கும் ஒருவர் புதிதாக வரும் ஒருவரிடம் தோற்பது… எப்பொழுதும் நடக்கும் ஒன்று தானே. 

மனிதன் தன் அறிவினாலும், கற்பனை திறத்தாலும், உள்ளார்ந்த ஈடுபாட்டாலும், நுட்பமாக அகத்தில் உணர்ந்து அதை ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்துவதே கலை. அப்படியான கலையின் புதிய பரிமாணம் எங்கு எப்படி யாரால் வந்தடையும் என்று எவரால் சொல்லிவிட முடியும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

என்பது கலைக்கும்  பொருந்தும் தானே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s