Rajinikanth J

December 12, 2020

வெண்முரசில் வீரக்கலை – 3

நண்பர்களே, ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி செய்யும் அனைவருக்கும் ஒன்று தெரிந்து இருக்கும். அந்த ஆயுதம் நம் உடம்பில் ஒரு அங்கமாக மாறாதவரை நம்மால் அதை சரிவர கையாள முடியாது என்று. எனக்கு தெரிந்த சிலம்ப ஆசிரியர் ஒருவர் என்னிடம் பேசும்போது கம்புடன் நான் பேசுவேன், அது நான் சொல்வதை கேட்கும் என்று கூறினார். வெளியிலிருந்து கேட்போருக்கு கம்புக்கு என்ன காது இருக்கிறதா? நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அது செய்வதற்கு என்று சற்று நகைச்சுவையாகவே தோன்றும். ஆனால் யோசித்துப் பாருங்கள் அப்படி ஒரு வார்த்தை ஒருவர் சொல்கிறார் என்றால் அதை உணர்ந்தால் மட்டுமே முடியும் அல்லவா. அவருக்குமே தெரிந்திருக்கும் மற்றவர்கள் கேட்டால் நகைப்பார்கள் என்று, ஆனாலும் அவரை மீறி அந்த வார்த்தை வருகிறது. அது நாம் சுழற்றும் ஆயுதம் நமக்கு கை வசப்படுவதால் வரும் ஒரு தன்னம்பிக்கையான வார்த்தை அன்றி வேறென்ன. அதையே கதை ஆயுதப் போர் பற்றி துரியோதனனும் அவர் தந்தையும் பேசும் வார்த்தைகள் அற்புதமாக விளக்குகின்றன.

 “தந்தையே, எத்தனை ஆற்றலிருந்தாலும் அதை குவித்துச் செலுத்தாவிட்டால் பயனில்லை. கதாயுதத்தை சுழற்றுகையில் அடிக்குப்பின் கதையை திரும்பவும் தூக்குவதற்கே கூடுதல் தோள்விசை செலவாகிறது. மிகக்குறைந்த விசையுடன் அதைத் தூக்கமுடிந்தால் மும்மடங்கு நேரம் அதை வீசமுடியும். மும்மடங்கு விசையுடன் அடிக்கவும் முடியும்என்றான் துரியோதனன். வீசும் விசையாலேயே திரும்பவும் கதையைத் தூக்கும் கலையையே கதாயுதப்போரின் நுட்பம் என்கிறார் ஆசிரியர். அதையே கற்றுக்கொண்டிருக்கிறேன்.திருதராஷ்டிரர் நிறைவின்மையுடன் கையை அசைத்து அந்த வித்தையை ஒரு எருமையோ யானையோ புரிந்துகொள்ளுமா? புரிந்துகொள்ளாதென்றால் அது சூது. அதை வீரன் ஆடலாகாதுஎன்றார்.

தந்தையே, எருமையின் படைக்கலம் அதன் கொம்பு. ஒவ்வொரு மிருகத்திற்கும் அதன் படைக்கலம் கூடவே பிறக்கிறது. தெய்வங்கள் அதை அவற்றுக்கு கருவறையிலேயே பயிற்றுவித்து அனுப்புகின்றன. அதை அவை யுகயுகங்களாக கையாள்கின்றன. கதையை நாம் இப்போதுதான் கையில் எடுத்திருக்கிறோம். நாம் கற்பதெல்லாம் எருமை கொம்பைக் கையாள்வது போல நம் படைக்கலத்தை மிகச்சரியாக கையாள்வது எப்படி என்றுமட்டுமேஎன்றான் துரியோதனன். பிரயாகை – 41

நாம் கற்கும் கலையில் நமக்கு உள்ள எல்லைகளை அறிய உதவும் மிக அழகிய வரிகள் இவை.

பேருருக் கொண்டவனாக இருக்கிறாய். அது உன் ஆற்றல். ஆனால் எக்கலையிலும் எது ஆற்றலோ அதுவே எல்லையுமாகும். உன் பேருருவே நீ காணமுடியாதவற்றை உருவாக்கும். நீ செய்யமுடியாதவற்றை சமைக்கும். அவற்றை அறியமுடியாத ஆணவத்தையும் உனக்களிக்கும்என்றார் பலராமர். பிரயாகை – 70

எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் நமக்கு நிகரான ஒரு வீரனை நாம் மனதளவிலும் கீழாக நினைக்காமல் அவனின் கலையையும், வீரத்தையும் மதிப்பதே நாம் கற்ற கலையின் மேன்மையை  உணர்த்தும். அதற்கு உதாரணமாக  பீமனும், அர்ஜுனனும் கர்ணனைப் பற்றி பேசும் இந்த வரிகள் நெகிழ வைப்பவை.

அர்ஜுனன் அருகே சரிந்த பீமன் மெல்லியகுரலில் பார்த்தா, இவன் வெல்வான்என்றான். அர்ஜுனன் அவன் வெல்வதே முறை மூத்தவரே. வில்லுக்குரிய தெய்வங்களின் அன்புக்குரியவன் அவன் மட்டுமேஎன்றான். பீமன் அவனிடம் அச்சமில்லை…” என்று சொல்லி தன் கைகளை மீண்டும் இறுக்கிக்கொண்டான் பிரயாகை – 85

தான் கற்கும் கலையில் தனக்கு உள்ள எல்லைகளை அறிந்த ஒருவனால் நிச்சயம் அந்த எல்லைகளை  கடக்கவும் முடியும். அதை ஒரு அறைகூவலாக எடுத்துக்கொண்டால். சரி கலையில் எல்லைகளே இல்லாமல் ஆக முடியுமா? ஏன் முடியாது  கலையில் தன்னை கரைத்தவன் பின்னர் கலையின்றி ஒன்றை காணமுடியுமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு  எல்லா ஊரும் எல்லா மக்களும் ஒன்று தானே. நகுலனின் கேள்விக்கு இளைய யாதவரின் அழகிய பதில் கீழே உள்ளது.

“ஒவ்வொருநாளும் ஓர் அறைகூவலுடன் எழுபவனே தன் கலையை கடந்துசெல்கிறான்.” அர்ஜுனன் அந்த இலக்குகளை மீசையை நீவியபடி நோக்கி நின்றான்.

நகுலன் “கலையை கடந்துசெல்வதா?” என்றான். இளைய யாதவர் திரும்பி “எந்தக்கலையும் ஒரு கருவியே. இவ்வில்லை நீங்கள் ஏந்திய தொடக்கநாட்களில் இதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? இன்று பயின்று பயின்று வில்லை கடந்து விட்டீர்கள். அவ்வாறே வில்வித்தையையும் கடக்க முடியும்” என்றார். நகுலன் “எப்படி?”என்றபடி அவர் அருகே வந்தான்.

திரும்பிப்பாராமலேயே இளைய யாதவர் தன் படையாழியை ஏவ அது சென்று ஏழு இலக்குகளையும் சீவிவிட்டு திரும்பி வந்தது. அர்ஜுனன் அதை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான். “இளைய யாதவரே, இலக்குகளும் அவ்வாறு இல்லாமலாகுமா?” என்றான் நகுலன். “கலையின் மறுஎல்லை என்பது அதுதான்” என்றார் இளைய யாதவர். பன்னிரு படைக்களம் – 24

கலையில்  மன ஒருமை பற்றியும், அதை கலை செம்மைப் படுத்துவது பற்றியும் அர்ஜுனன் கூறும்  அற்புத வரிகள் இவை.

“படைக்கலங்கள் அனைத்தும் கூரியவை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.”

“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” கிராதம் – 74

கலையில் கரை கண்ட ஒருவன், பலரால் வித்தகன் எனப் போற்றப்பட்ட ஒருவன், பல நூறு வெற்றிகளை கண்ட ஒருவன் திடீரென்று காட்டில் தான் சந்தித்த ஒரு காட்டாளனிடம் தோற்றுவிட்டால் அவன் மனநிலை எப்படி இருக்கும். நண்பர்களே, கீழ் உள்ள  வரிகள் அந்த  காட்டாளனின் மனைவி காளி தோல்வி பற்றியும், அவன் மேலும் அறிந்து கொள்வது பற்றியும் கூறியிருப்பார்.  இந்த வரிகள் இடம்பெற்றிருக்கும் கிராதம் 79 ஆவது அத்தியாயம் முழுக்கவே ரசித்து படிக்கக்கூடிய ஒரு அத்தியாயம்தான். முழு அத்தியாயத்தையும் கொடுக்க முடியாததால் தோல்வியை ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டிய மனநிலை பற்றிய இந்த  அருமையான வரிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் அவள் முகத்தை நோக்கியபடி உளமழிந்து நின்றான். அவள் விழிகள் முலையூட்டும் அன்னைவிழியென கனிந்திருந்தன. சின்னஞ்சிறு குமிழுதடுகளில் எப்போதுமென ஒரு புன்னகை இருந்தது. அவிழ்ந்த நீள்குழலை அள்ளிச் சுழற்றிமுடிந்தபடி அவள் திரும்பியபோது அவன் அறியாமல் அவர்களை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் திரும்பி “என்ன?” என்றாள். அவன் நெஞ்சு கலுழ விம்மி அழுதபடி “இனி நான் வாழ விரும்பவில்லை, அன்னையே” என்றான். அவள் அவனை நோக்கி புருவம் சுளித்து “ஏன்?” என்றாள். “நான் தோற்றுவிட்டேன்… தோல்விக்குப் பின் வாழ்வது என்னால் இயலாது” என்றபோது அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து நெஞ்சில் சொட்டியது. உதடுகளை இறுக்கி அவன் தலைகுனிந்தான்.

அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்?  அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான்.  உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன. இனிய மென்குரலில் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை” என்றாள். கிராதம் – 79

பயிற்சி களத்தில் தனி பயிற்சி செய்யும்போது ஏற்படும் மன ஒருங்கிணைவை உணர்ந்தது உண்டு. லிவிங் வித் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் என்ற பேட்டியில், பேட்டியாளர் மைக்கேல் ஜாக்சனை பார்த்து ஒரு கேள்வி கேட்டிருப்பார். நடனமாடும் போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு   ஆடுவீர்கள்  என்று?அதற்கு மைக்கேல், என்ன நினைப்பது? எதையாவது நினைத்துக் கொண்டு ஆடினால்  அது தான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. ஆடும்போது மனம் முழுக்க ஆட்டத்தின் தான் இருக்கிறது வேறு எதுவும் இல்லை என்று கூறியிருப்பார். நீர்க்கோலம் நூலில் 27 வது அத்தியாயத்தில் உள்ள கீழ்வரும் வரிகளைப் படித்தபோது  மேலே கூறிய மைக்கேல் ஜாக்சனின் பேட்டி என்னை அறியாமல் நினைவுக்கு வந்தது. கீழ் உள்ள வரிகள் நடன கலை பற்றியது என்றாலும் எல்லா கலையும் அடிப்படையில் ஒன்று தானே. தன் அசைவில் உளம் குவிக்க முடியாதவன் சண்டை கலையில் பிறர் அசைவை எப்படி கண்டுபிடித்து தடுக்க முடியும். 

நடனக்கலை என்பது நம் தன்னிலையை இங்கிருந்து விலக்கி பிறவெனச் சூழ்ந்துள்ளவையாக முற்றிலும் ஆக்கிக்கொள்ளுதலே. மேடையில் ஆடுவதல்ல அது. நடனத்தின் முழுமையென்பது தானன்றி எவருமே இல்லாத இடத்தில் ஆட்டன் அடையும் நிறைவு மட்டுமே.” நீர்க்கோலம் 27

வகுப்பில் ஆசிரியர் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பயிற்சி அளிக்கிறார். ஆனால் சில மாணவர்கள் உடனே கற்றுக் கொள்கிறார்கள். சில மாணவர்கள் சற்று காலம் தாழ்த்தி கற்றுக்கொள்கிறார்கள். அதேபோல் ஒரு வகுப்பில் அனைவருமே முதலில் வருவதில்லை அதை விளக்கும் கீழுள்ள வரிகள் மிக முக்கியமானவை.

எந்த ஆசிரியர் அளிப்பதையும் மாணவர்கள் அவ்வண்ணமே பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியர் விதைகளை அளிக்க முடியும், முளைப்பது அவரவர் ஈரம் – நீர்க்கோலம் – 28

ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான வரிகள்.

நான் அவனுடைய ஆசிரியன். எந்த எதிர்பார்ப்புமின்றி வாங்கும் கலத்தின் வல்லமையை மட்டுமே நோக்கி படைக்கலக்கல்வியை அளித்தேன். திறன்கொண்ட தோளர் எவருக்கும் அதை அளிக்காமலிருந்ததும் இல்லை” என்றார் பலராமர் – எழுதழல் – 60

ஆம் ஒரு ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் இல்லையா. தன்னிடம் கற்கும் மாணவன் ஏழையா, பணக்காரனா, சொந்தமா என்ற எந்த பாகுபாடும் கிடையாது அவனின் திறமைக்கு ஏற்ப அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டிருப்பது தான் ஒரு ஆசிரியரின் மிகச்சிறந்த பண்பு.

என் முதன்மை ஆசிரியர் வீரக் கலைஞர் மனோகரன் அவர்கள் ஒரு கதை சொல்லுவார், ஐந்து வீரக்கலை ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் முதலில் என் சண்டை முறை இப்போது மாறிவிட்டது , எதிரி அடித்தால் முதல் அடியை தடுத்தவுடன் ஒரு அடியில் அவனை வீழ்த்திவிடுவேன். சண்டை இரு வினாடிகளில் முடிந்துவிடும் என்று கூறுவார் . இதை கேட்ட அடுத்த ஆசிரியர் இரண்டு வினாடி எதற்கு தேவை , நான் தடையும் அடியும் ஒரே கணத்தில் செய்து விடுவேன், தடுப்பதையும் அடிப்பதையும் தனித்தனியே செய்வது நேர விரையும் என்று கூறுவார்  , மூன்றாவது ஆசிரியர்  சற்று யோசித்து விட்டு எதிரியின் அடியை எதற்கு நமது சக்தியை விரையம் செய்து தடுக்கவேண்டும் . எதிரியின் அடியில் இருந்து விலகி அடிப்பேன் என்று கூற நான்காவது ஆசிரியர் வியப்புடன் சண்டை என்று வந்த பிறகு எதிரி அடிக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். அவன் நம்மை அடிக்க அசையும் கணத்திலேயே நான் அடித்து விடுவேன் என்று கூறுவார். ஐந்தாவது ஆசிரியர் அமைதியாக இருக்க, அனைவரும் அவரை நோக்க அவர் சிரிப்புடன் என் எதிரில் இருப்பவர் என்னை தாக்க மனதில் முடிவு செய்து விட்டாலே நான் அவரை தாக்கி விடுவேன் என்று கூறுவார். நூல்பதினேழு – இமைக்கணம் – 12   அத்தியாயத்தை படித்த போது மீண்டும் அதை நினைத்து கொண்டேன் . புற பயிற்சி என்பது ஒரு ஆரம்ப நிலை என்று. 

சீன மொழி திரைப்படங்களில் மட்டுமே நான்  வளையும் வாட்களை  வைத்து சண்டையிடும் சண்டைக்காட்சிகளை பார்த்துள்ளேன். அதன் அடிப்படை ஆரம்பத்தில் எனக்கு புரியவில்லை. பின்னர் சற்று பயிற்சி கூடிய பிறகு புரிய ஆரம்பித்தது. ஆனால் அதை இரண்டு வரிகளில் ஆசிரியர்  விளக்கி  இருப்பது உண்மையிலேயே எனக்கு மிகப் பெரிய வியப்பை அளித்தது. நான் அவருக்கு கடிதம் எழுதி இதையெல்லாம் எங்கே படிக்கிறீர்கள் அந்தப் புத்தகத்தை எனக்கு பரிந்துரைக்க முடியுமா என்று கேட்கும் அளவிற்கு அதிசயித்து விட்டேன்.

அதற்கு அவர் இவ்வாறு பதில் அனுப்பி இருந்தார். “நான் வெண்முரசிலுள்ள போர்க்கலைச் செய்திகளை மூன்று இடங்களில் இருந்து எடுத்தேன். ஒன்று, இளமையில் ஒரு போர்க்கலைப் பயிற்சி எனக்கு இருந்தது. அது எங்களூர் வழக்கம். ஆனால் நான் தெரிந்துகொண்டதே மிகுதி, பயின்றது மிகக்குறைவு. கேரள களரி கலை சார்ந்த செய்திகளை களரி நூல்களிலிருந்தும் ஆசிரியர்களில் இருந்தும் பயின்றேன். களரி சார்ந்த ஒரு சினிமாவுக்கு எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. கன்னடப்படம்- தேஹி

மகாபாரதத்திலேயே உள்ள சஸ்த்ர- நிசஸ்த்ர வித்யைகள், [படைக்கலக்கலை, படைக்கலமில்லாப் போர்க்கலை] தனுர்சாஸ்திரம் [விற்கலை] ஆகியவை பற்றிய செய்திகளையும் எடுத்துக்கொண்டேன்” என்று. அவரின் எழுத்துல உழைப்பு வியக்க வைத்தது.

எடையைவிட கூர்மை மேல். கூர்மையைவிட விசை மேல். விசையைவிட கோணம் மேலானது. கோணத்தை விட தருணம் முதன்மையானது. செந்நாவேங்கை 21

கார்கடல்-15 -“மிகச் சரியாக படைநூல்கள் கூறும்படி அமைக்கப்பட்டுள்ளன இச்சூழ்கைகள். ஆனால் நூல்களில் இல்லாத ஒன்று எப்போதும் படைகளில் நிகழும். அதுவே போரை வடிவமைக்கும்” என்று கர்ணன் சொன்னான்

வியுகமாக இருந்தாலும் அல்லது எந்த சண்டை நுட்பமாக இருந்தாலும் ஏட்டில் படித்து புரிந்து கொள்வதற்கும் நடைமுறை சாத்தியங்களுக்கும் உள்ள வேறுபாடு தேர்ந்த வீரர்களால் மட்டுமே அறியமுடியும். வீரக்கலை புதிதாக கற்பவர்கள் சில நுட்பங்களை அறியும்போது அது தான் உச்சம் என்று நினைப்பார்கள். ஆனால் அதை உடைக்கும் இன்னொரு நுட்பம் தெரியவரும் போது, யாராலும் தப்பமுடியாத நுட்பத்தை சொல்லி தரும்படி கேட்பார்கள். அப்படி ஒரு நுட்பம் கிடையாது. மாட்டி கொள்வதும் தப்பிச்செல்வதும் எதிரில் நிற்பவரின் திறமையை பொருத்து தான் உள்ளது என்று கூறினால் ஏற்க மறுப்பார்கள். மந்திரம் போல ஒரு நுட்பம் தன்னை எந்த நிலையிலும் காக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அப்படி ஒரு மந்திரம் உண்மையிலேயே இருக்க முடியுமா என்ன?  புரூஸ் லீயின் ஒரு புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உண்டு “நான் ஆயிரம் விதமான உதைகளை ஒவ்வொரு முறை பயிற்சி செய்தவனை பார்த்து பயப்படுவது இல்லை. ஆனால் ஒரே ஒரு உதையை  ஆயிரம் முறை பயிற்சி செய்தவனை பார்த்து பயப்படுகிறேன்”. 

முற்றும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s