Rajinikanth J

December 11, 2020

வெண்முரசில் வீரக்கலை – 1

வணக்கம் நண்பர்களே, 2014 ஜனவரி முதல் 2020 ஜூலை வரை வெண்முரசு என்ற  ஒரு மிகப் பெரிய நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ளார். இது மகாபாரதத்தின் மறுஆக்கம் ஆகும். இந்த பதிவு நாவலில் நான் படித்து ரசித்த அல்லது என் மனதில் வார்த்தைகள் அற்று இருந்த வீரக் கலையின் பல விஷயங்களுக்கு முறையான வார்த்தைகள் அளித்த கருத்துக்களை பற்றியது. ஒரு வீரக்கலை ஆசிரியனாக என் மனதில் உள்ளதை நான் மாணவருக்கு கடத்தும் போது அதை பல்வேறு வார்த்தைகளில், மொழி சார்ந்து ஆங்கிலத்தின் உதவியுடன் விளக்க வேண்டியிருக்கும். ஆனால் தூய தமிழ் நடையில் எழுதப்பட்ட இந்த நாவலை படிக்கும் போது நம் மனதில் வீரக்கலை சார்ந்து அல்லது அது சார்ந்த நுணுக்கங்கள் பற்றி ஒரு பக்க அளவுக்கு பேச வேண்டியதை ஆசிரியர் பல இடங்களில் இரண்டு அல்லது மூன்று வரிகளில் சாதாரணமாக எழுதியிருப்பார். அது போன்ற வரிகளை படித்தவுடன் எனக்கு அதை தாண்டி செல்ல மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படித்துக் கொண்டிருப்பேன். அப்படிப் படித்து நான் தெரிந்துகொண்ட மற்றும் ரசித்த பல வரிகளை தான் இந்த கட்டுரையில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும் 26 தனி நூல்களாக வெளிவந்துள்ள இந்த மிகப்பெரிய நாவலில் உள்ள வீரக்கலை சார்ந்த அனைத்து விஷயங்களையும் என்னால் சொல்ல முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது. அதிலும் குறிப்பாக பதினெட்டாவது நூலான செந்நா வேங்கையில் குருச்சேத்திரப் போரின் முதல் நாளும், அடுத்து வந்த மூன்று நூல்களான திசை தேர் வெள்ளம், கார்கடல் மற்றும்  இருட்கனி ஆகியவற்றில் குருச்சேத்திரப் போரின் மீதி நாட்களும் வந்துள்ளன. சண்டைக்காட்சிகளை எல்லாம் எழுதாமல் இதில் வீரக்கலை சார்ந்த அடிப்படை நுணுக்கங்கள் பற்றிய வரிகளையும், கற்கும் மனநிலைகள், கற்றுக்கொடுக்கும் மனநிலைகள், சண்டையின் போதான மனநிலைகள், கலையின் உச்சம் மற்றும் பிரபஞ்ச தன்மை போன்றவற்றை மட்டும்  கொடுக்க முயன்றுள்ளேன்.

வீரக் கலையின் உச்சத்தில் உள்ள ஒருவர் போர் செய்யும் போது தங்கள் எதிரிகளை மட்டுமல்ல அங்கு உள்ள சூழ்நிலைகளையும் நன்கு கவனிப்பார் என்பதை உணர்த்தும் வரிகள் இவை.

பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன. முதற்கனல் – 12

தான் கற்ற கலையின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர் தன்னிடம் தனக்கு நிகராக தன்னைவிட இளையவர் வந்து மோதும்போது அதனால் தனக்கு ஏற்படும் காயத்தை கண்டு சினம் கொள்வாரா? அல்லது ஆணவத்தால்  சீண்டப் படுவாரா? இரண்டும் இல்லை நண்பர்களே அந்த கலைஞனை பாராட்டவே செய்வார் கீழ்வரும் வரிகள் அதைத்தான் சொல்கின்றன.

சால்வனுடைய அம்பு ஒன்று பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்தது. அவரது கூந்தலை வெட்டிச்சென்றது அர்த்தசந்திர அம்பு ஒன்று. பீஷ்மர் முகம் மலர்ந்து உரத்த குரலில் சால்வனே, உன் வீரத்தை நிறுவிவிட்டாய்இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன் போரிட்டிருக்கிறாய். உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும். உன் குடிகள் நலம்வாழட்டும்என வாழ்த்தினார். முதற்கனல் – 12

வாள் வீச்சின் முறைமைகளை மிக அற்புதமாக எடுத்து சொல்லப்பட்டிருக்கும் அருமையான வரிகள் இது.

ஆம் அது முறைதான்என்றார் பீஷ்மர். வாளில்லாதவனை மன்னனாகிய நீ கொல்லக்கூடாது…” கையில் அந்த வாளை எடுத்துக்கொண்டு, “முன்னால் வாஐந்துவிரல்களாலும் வாளைப்பிடிக்காதே, வெட்டின் விசை உன் தோளில்தான் சேரும். நான்கு விரல்கள் வாளைப்பிடிக்கையில் சுண்டு விரல் விலகி நின்றிருக்கவேண்டும். மணிக்கட்டுக்குமேல் வாளின் விசை செல்லக்கூடாதுஎன்றார். இருகால்களையும் சேர்த்து நிற்காதே. இடக்காலை சற்று முன்னால் வைத்து இடுப்பைத்தாழ்த்தி நில்வாள் உன்னை முன்னகரச்செய்யட்டும்.முதற்கனல் – 18

தனிப்பட்ட வீரம் என்பது வேறு ஒரு படையை வழி நடத்துவது என்பது வேறு, அதுபோலத்தான் சிறந்த விளையாட்டு வீரனாக இருப்பது என்பது வேறு ஒரு சிறந்த அணி தலைவனாக இருப்பது என்பது வேறு. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு பண்புகளாகும். அதை கீழ் வரும் வரிகள் உணர்த்துகின்றன.

இளவரசே, வீரம் வேறு  படைநடத்தல் வேறுஎன்றார் தளகர்த்தரான பிரசேனர். உங்களைத் தொடர்ந்துவரும் ஆயிரக்கணக்கான வீரர்களிடம் நீங்கள் நினைப்பதை சொல்வதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் அடையவில்லை. அதுவே தளபதிக்கான கல்வி.முதற்கனல் – 39

மனத்தையும் உடலையும்  தன் வசப்படுத்தாமல் எந்த கலையையும் கற்க முடியாது. குறிப்பாக வீரக் கலையில் கோபம் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு முக்கிய குணமாகும்.  உதாரணமாக எதிரில்  நிற்பவரிடம் ஒரு அடி வாங்கி விட்டாலே வலியினாலோ அல்லது ஆணவத்தினாலோ நம்மை அறியாமலேயே கோபம் தலைக்கு ஏறும். அதை  நம் மனதில் வளரவிட்டால் பின்னர் எதிராளியின் எந்த அசைவும் நமக்கு புரியாது, நம் கோபம் மட்டுமே நம் மனதை ஆக்கிரமித்திருக்கும். அதை வென்று எதிராளியின் அசைவுகளை அறிய  தொடங்குவதே  வீரக்கலையில் இருக்கும் முக்கியமான பயிற்சி.  அக்னிவேசர் தன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது வரும் முக்கியமான வரிகள் தான் இவை.

சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றார் அக்னிவேசர். முதற்கனல் – 43

சினத்தை வெல்லவே அனைத்துப்போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண்முன் தோற்றமே புறம். ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலேயாகும். புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றுக. அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக. கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவே உலகமென்றாகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்தப்பருப்பிரபஞ்சமும் அவன் கையில் நிற்கிறது. அது வில்லாகலாம் வாளாகலாம். உளியாகலாம் முரசுக்கோலாகலாம்…” முதற்கனல் – 43

சினம் நம்மை திசைதிருப்பும் என்பது உண்மைதான். ஆனால் வெறிகொண்ட சினம் என்ன செய்யும்? வெறும் அகந்தையினால் வரும் சினம் நம்மை செயலிழக்கச் செய்யும். ஆனால் சுற்றமும், நண்பரும், குடும்பத்தாரும் நம் கண் முன்னே கொல்லப்படும்போது நமக்கு வரும் சினம் வெறியாக மாறி நம் பலத்தை இன்னும் பத்து மடங்காக மாற்றும் என்பதும் உண்மைதானே. அதைத்தான் இங்கு துருபதனின் வடிவில் அர்ஜுனன் காண்பது.

கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே துருபதன் நின்றான். இறுதிக்கணத்தில் துருபதனில் கூடிய வெறி அர்ஜுனனை வியப்படையச்செய்தது. வில்வித்தையில் முழுமையான அகஅமைதியே அம்புகளை குறிதவறாமல் ஆக்குமென அவன் கற்றிருந்தான். ஆனால் உச்சகட்ட வெறியும் அதையே நிகழ்த்துமென அப்போது கண்டான். அப்போது துருபதனின் அகமும் ஆழத்தில் அசைவற்ற நிலைகொண்டிருந்ததா என எண்ணிக்கொண்டான். பிரயாகை – 9

கலையை கற்பது பற்றி ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. ஒரு மாணவன் ஆசிரியரிடம் சென்று தான் கலையைக் கற்க விரும்புவதாகவும் எவ்வளவு சீக்கிரம்  தன்னால் கலையை கற்றுக்கொள்ள முடியும் என்று கேட்பார். அதற்கு ஆசிரியர் ஒரு 10 வருடங்கள் ஆகும்  என்று பதில் கூறுவார். அதற்கு மாணவர் ஆசிரியரே, நான் காலை மாலை இருவேளையும் வந்து கற்றுக்கொள்கிறேன் அப்போது எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அதற்கு ஆசிரியர் அப்படி என்றால் 15 வருடத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுவார். மாணவர் சற்று  அயர்ந்து விட்டு நான் உங்களோடு இருக்கிறேன் எப்போதும் பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன் அப்போது எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அதற்கு ஆசிரியர் ஒரு 20 வருடத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுவார்.  அதற்கு மாணவர் சரி நான் வந்து கற்றுக் கொள்கிறேன், எப்போது நான் கற்றுக் கொண்டு விட்டேன் என்று சொல்கிறீர்களோ அப்போது நான் மீண்டு செல்கிறேன் என்று சொல்லுவார். உடனே ஆசிரியர் சிரித்து உனக்கு இருக்கும் அவசரத்தை  பார்த்தால் கலையின் மேல் இருக்கும் பற்றை விட நான் இந்த  கலையை முழுவதுமாக  கற்று கொண்டு விட்டேன் என்று வெளியில் சென்று பெருமை பேசும் அவசரம்தான் அதிகம் உள்ளது போல் தெரிகிறது. நான் முதலில் சொன்ன பத்து வருடத்திற்கு குறைவாக கூட உன்னால் கற்றுக் கொள்ள முடியும். ஆனால்  அதை என்னால் இப்போது சொல்ல முடியாது. உன் வெளிப்புற உடற்பயிற்சி மட்டுமல்ல உன் மனப் பயிற்சியும் சேர்ந்தால்தான் கலை உனக்கு  கனியும் என்று கூறுவார். அதுபோல அக்னிவேசர் துரோணருக்கு சொல்லும் மூன்று மனநிலைகள் தான் கலையின் ஞானம் கணிவதற்கான வழிகள்.

அக்னிவேசர் சொன்னார் துரோணா, வித்தையின் பொருட்டு மட்டுமான வித்தையே ஞானமாகக் கனியும். ஞானத்தை வெல்வதற்கான ஆசையே கூட வித்தைக்கு தடையே. வித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.துரோணர் வணங்கினார். நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே. அதற்கென்றே வில்லை ஆள்வாயாக!முதற்கனல்’ – 43

போருக்கு தேவையான மன ஒருமையையும் எடைமிக்க ஆயுதங்களைக் கொண்டு அதிக நேரம் சண்டை செய்யும் முறைகளையும் விளக்கும் அற்புதமான வரிகள் இவை.

அவன் கண்கள் என் கண்களை மட்டுமே பார்த்தன. ஒருகணமாவது என் கதையை அல்லது தோள்களை அவன் பார்க்கிறானா என்று நான் கவனித்தேன். மிருகங்கள் மட்டுமே போரில் அவ்வளவு முழுமையான கவனம் கொண்ட கண்களுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

ஆனால் முதல் அடியை அவன் தடுத்தபோதே தெரிந்துவிட்டது அவனை என்னால் எளிதில் வெல்லமுடியாதென்று. வழக்கமாக கதைவீரர்கள் செய்வது போல அவன் என் அடியை கீழிருந்து தடுத்து அதன் விசையை தன் கதையிலோ தோளிலோ ஏற்றுக்கொள்ளவில்லை. கதையின் குமிழுக்கு மிகக்கீழே என் கைப்பிடிக்கு அருகில் அவன் கதையின் குமிழ் என்னை தடுத்தது. ஹம்ஸமர்த்த முறைப்படி அன்னங்கள் கழுத்தை பின்னிக்கொள்வதுபோல எங்கள் கதைகள் இணைந்தன. அவன் மெல்ல அவ்விசையை திசைமாற்றி என்னை தடுமாறச்செய்தான்.

இளைஞனே, உன்னைப்பார்த்தால் கதை உன் ஆயுதமல்ல என்று தெரிகிறது. சுழலும் கதையின் ஆற்றல் உச்சகட்டமாக வெளிப்படும் இடமும் உண்டு. மிகக்குறைவாக வெளிப்படும் இடமும் உண்டு என்பதைத் தெரிந்துகொள். அவன் கதை என் வீச்சை எப்போதும் மிகக்குறைந்த விசைகொண்ட முனையில்தான் சந்தித்தது. ஒவ்வொருமுறையும் அவன் கதை என் கதையை திசைமாற்ற மட்டுமே செய்தது. அதற்கு என் விசையையே அது பயன்படுத்தியது. எங்கள் போரை வலிமைக்கும் திறமைக்குமான மோதல் என்று சொல்லலாம். முதற்கனல் – 46

புத்திமான் பலவான் ஆவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது போல எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் நல்ல அறிவு இல்லையென்றால் அவன் வெல்வது கடினம். பலாஹாஸ்வர் முனிவரின் வார்த்தையாக வரும் இந்த வரிகள் முக்கியமானவை

பலாஹாஸ்வர்.  ”முட்டாள். இவன் தோற்பான் என நான் முன்னரே அறிவேன். உடல் அறிவின் ஆயுதம் மட்டுமே.விதுரன் மிகமெல்ல அதை அவர் இந்தப்போர் வழியாகவே அறியமுடியும் முனிவரேஎன்றான். உன் திட்டமா இது?” என்றார் பலாஹாஸ்வர். மழைப்பாடல் – 6

போரின் போது தேவைப்படும்  மன ஒருமையையும்,  போரில் ஏறி அடிப்பது போல் இறங்கி தடுப்பது முக்கியம். இரண்டும் சேர்ந்தது தான் சண்டை என்று கிருபர் துச்சாதனன் மற்றும் பீமனுக்கும் விளக்கும் மிகச்சிறந்த வரிகள் இவை.

எப்போது உன் அகம் முழுமையாக அசைவற்று நீ போர்செய்கிறாயோ அன்றே உன் கரம் முழுவல்லமையைப் பெறும்என்றார் கிருபர். துச்சாதனன் வணங்கினான்.

பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான். வண்ணக்கடல் – 13

தொடரும்…

1 thought on “வெண்முரசில் வீரக்கலை – 1

  1. Pingback: வெண்முரசில் போர்க்கலை | எழுத்தாளர் ஜெயமோகன்

Leave a comment