கலையின் கணம்
நண்பர்களே ஒரு கலையை தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் சிலகணங்கள் அமைவதுண்டு. அதை கலைக்கணம் என்று சொல்லலாம். சமீபத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் புலிக்கலைஞன் என்ற ஒரு கதை படித்தேன். அந்த கதையில் டகர் பாயிட் காதர் என்று ஒரு கதாபாத்திரம் வரும் அந்த கதாபாத்திரம் ஒரு புலி கலைஞனாக வரும். அவர் ஒரு சினிமா கம்பெனியில் வந்து தனக்கு ஏதாவது வேடம் இருந்தால் கொடுங்கள், நான் புலிவேஷம் நன்றாக ஆடுவேன் என்று கூறி வாய்ப்பு கேட்பார். அவருக்கு டைகர் பைட் (Tiger fight) என்று கூட சரியாக சொல்ல தெரியாது, அதை டகர் பாயிட் என்று தான் சொல்லுவார். அவர் தன்னுடைய புலி முகமூடியை அணிந்து புலி வேடமிட்டு புலியைப் போல் செய்து காண்பிப்பார். அதை பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு புலியாகவே தெரிவார். பின்னர் அந்த வேடத்தை கலைத்தவுடன் அவர் தனக்கு வாய்ப்பு வேண்டி கெஞ்சும் போது அதை பார்த்துக்கொண்டிருந்த கதைசொல்லி சொல்லுவார், “இப்போது கண்கலங்கி பேசும் இவர் தான் சற்று முன்பு புலியாக இருந்தவர் என்று”. அதாவது அந்த புலிக்கலைஞன் அந்த கலையை செய்து காட்டும் போது மனிதன் அல்ல புலி தான், அவர் தன்னை புலியாக நினைத்து நடிப்பதோ, பாசாங்கு செய்வதோ அல்ல புலியாக மாறி விடுவது தான் அந்தக் கணம். அந்தக் கணம்தான் கலையின் கணம். ஆம் நண்பர்களே அந்த நேரத்தில் அவர் ஏழையோ, பணக்காரரோ, ஆணோ, பெண்ணோ அல்ல. அவர் எதுவாக அந்த கலையை உணர்ந்து செய்கிறாரோ அதுதான் அவர். இதேபோல், இன்னொரு ஒரு உதாரணமும் சொல்லலாம் நாசர் அவர்களின் அவதாரம் திரைப்படத்தில் கடைசியில் ஒரு காட்சி வரும். வில்லனாக நடித்த பாலா சிங் அவர்களை நாசர் கொல்ல வருவார். அவரின் அந்த நரசிம்ம அவதாரத்தை பார்த்தவுடன் வில்லனுக்கு பயம் வந்துவிடும். அந்த பயத்தை போக்க அவர் கூத்து கலையில் போடும் ஒரு மகாபாரத கதாபாத்திரத்தை அதற்குரிய பாடலை பாடி அந்த கதாபாத்திர நிலையை நோக்கி மனதளவில் செல்வார். பின்னர் அவர் நாசர் அவர்களை எதிர்பார்த்து காத்திருப்பார், பயந்து ஓட மாட்டார். கூத்துக் கலைஞர்களுக்கு இயல்பாகவே வரும் ஒரு மனநிலை அது. கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் அவர்கள் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள் மறுநாள் காலையில் வேண்டுமென்றால் அவர்கள் முதலாளியிடம் சென்று ஒரு 50 ரூபாய் போட்டு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலைமை இருந்தாலும் இருக்கும். ஆனால் எந்த பாத்திரத்தை ஏற்று அரிதாரம் பூசுகிறார்களோ, அந்த நேரத்தில் அவர்கள் அந்த ஆளுமை தான்.
இதேபோல் இன்னொரு ஒரு கணத்தையும் கலைக்கணம் என்று சொல்லலாம். அது கலையின் தரிசனத்தை அல்லது அதன் ஒரு அங்கத்தை உணரும் தருணம் என்று சொல்லலாம். நண்பர்களே நாம் ஒரு கலையை கற்கும் போது ஆரம்பத்தில் இருந்து, பல பயிற்சிகளை செய்திருப்போம். ஆனால் அந்தப் பயிற்சிகளை உடலளவில் வெறும் அசைவுகளாக தான் பல நாள் செய்து இருப்போம், சட்டென்று ஒரு நாள் அந்த பயிற்சியின் அர்த்தம் நமக்கு புரியும் அல்லது நாம் பயிற்சி செய்யும் அந்த கலையின் ஒரு தரிசனத்தை புரிந்துகொள்வோம். பல வருடங்களாக செய்யும் ஒரு பயிற்சியை நாம உணர்வதற்கு ஒரு தருணம் வரும். அந்த தருணத்தையும் கலையின் கணம் என்று சொல்லலாம். என் ஆசிரியர் வீர கலைஞர் மனோகரன் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவர் அடிக்கடி சொல்வது ஒன்று உண்டு, “நீ பயிற்சி செஞ்சுக்கிட்டே இரு, எதையும் எதிர்பார்க்காதே, பயிற்சி செய்வது மட்டும்தான் வேலை, செஞ்சுக்கிட்டே இரு, நீ செய்யறது பார்த்து கடவுளே உனக்கு தூக்கிப் போடுவாரு, அட இவன் நல்லா செய்றானே, இவனுக்கு நாம கொடுப்போம் அப்படின்னு சொல்லி அவர் தருவார்” அப்படின்னு சொல்லுவார். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கடவுள் தருவார் என்று என் ஆசிரியர் சொன்னதை, என் பயிற்சியின் மூலம் மூளை சட்டென்று ஒருநாள் உணர்ந்து கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். எந்த கலையையும் உள்ளார்ந்து பயிற்சி செய்தால், கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அந்த கலையின் ஞானம் அவருக்கு வந்து சேரும் அல்லவா. அதே போல் நான் சண்டை பயிற்சியில் மூத்த மாணவர்களிடம் அடி வாங்கும் போது என் ஆசிரியர் “கண் கொண்டு பாருய்யா ” என்று பல தடவை கூறியும் புரியாது. திரு திரு வென்று முழித்து விட்டு கண்ணு திறந்து தான் வச்சிருக்கேன் என்று மனதுக்குள் கூறிக்கொள்வேன். ஆனால் அவரின் அறிவுரைக்கேற்ப கற்பனை சண்டையில் என் அசைவுகளை கவனித்து செய்ய ஆரம்பித்தபின் சண்டை பயிற்சியில் எதிரில் இருப்பவரின் அசைவுகள் கண்ணில் தெரிய ஆரம்பிக்கும். ஆம், கலையின் தரிசனத்தை அறியும் கணமும், அதை உள்ளார்ந்து உணர்ந்து செய்யும் கணமும் கலையின் கணம் தான்.
