புரூஸ் லீ
வீரக்கலை கற்பவர்கள் யாராக இருந்தாலும் அல்லது சண்டை காட்சிகள் நிறைந்த படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் விரும்பக் கூடிய ஒரு ஹீரோ புரூஸ் லீ. 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், வீர கலை உலகில் இன்று வரை தன்னிகரற்று விளங்கும் ஒரே வீரர் அவர் என்றே சொல்லலாம். புரூஸ் லீ நடித்த படம் பார்க்கும் அனைவருக்கும் வீரக்கலை கற்கும் ஆசை வந்து விடும். சிறு வயதில் என் தந்தை சீன சண்டை படங்களுக்கு பெரும்பாலும் அழைத்து சென்று விடுவார். சண்டை கனவுகளிலேயே சிறு வயது கடந்தது. என்னை பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் தான் அருகிலிருக்கும் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டார். கற்க ஆரம்பித்தது கராத்தே தான், ஆனால் அதிகம் பேசியது குங்பூ படங்களை பற்றி தான். இன்றும் நண்பர்களுடன் சினிமா கதாநாயகர்கள் வரிசையில் யார் சிறந்த வீரக்கலை நிபுணர் என்ற பேச்சு வந்தால் அதில் புரூஸ் லீக்கு முதலிடம் என்பதை அனைவரும் ஏற்று கொள்வார்கள். அடுத்த இடம் யார் என்பதில் தான் விவாதம் ஆரம்பிக்கும். இது வரை வந்த திரைப்படங்களில் கூட புரூஸ் லீ அளவுக்கு தொழில் நுட்பங்களை மன ஒருமையுடன் செய்தவர் யாருமில்லை என்று தான் நினைக்கிறேன். அவர் அளவுக்கு நேர்த்தியுடன் செய்பவர் இருக்கலாம், பல நூறு விதமான தாக்குதல் மற்றும் தடுக்கும் முறைகளை காட்டியவர்கள் இருக்கலாம். ஜெட் லீ, ஜாக்கி சான், டோனி யென், ஸ்டிவன் சீகல், சக் நாரிஸ், சமோ அங் , யூஎன் பயோ என அதன் வரிசை நீளும். ஆனால் தான் செய்யும் அசைவுகளில் முழு மன ஒருமையுடன் கூடிய சீற்றமும் அதில் வெளிப்படும் வேகமும், ஆதனால் உருவாகக்கூடிய அசுர பலமும் புரூஸ் லீயிடம் மட்டுமே இன்று வரை சாத்தியம். புரூஸ்லீக்கு பிறகு பல கதாநாயகர்கள் அவரைப் போலவே சீற்றத்துடன் அதே உடல்மொழியில் நடிக்கும் முயன்று தோற்ற படங்கள் பல உண்டு இதை ஜாக்கிசான் அவரே ஒரு பேட்டியில் கூறி, பின்னர் தனக்கு வராது என்று நகைச்சுவையோடு கலந்த சண்டை நுட்பங்களை தன் படங்களில் புகுத்த ஆரம்பித்ததாக சொல்லியிருப்பார். அப்படி என்ன புரூஸ் லீக்கு தனி சிறப்பு? அது அவருடைய சண்டைக்காட்சிகளில் வெளிப்படும் நேர்த்தியான நுட்பம், அசாத்திய வேகம், அசுர பலம், இதுமட்டுமல்லாமல் சண்டைக்காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க கூடியவரும் அவர் ஒருவர்தான். இது மட்டுமா புரூஸ் லீயின் சிறப்பு? திரைப்படங்களை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சிறந்த வீரக்கலை நிபுணர். அவர் காட்டியது 5 படங்களில் பெரும்பாலும் அடிப்படை நுட்பங்கள் தான். அதிலும் ஐந்தாவது படத்தில் முக்கியமான சண்டைக் காட்சிகளில் மட்டும்தான் நடித்திருப்பார் மீதி படத்தை முடிக்கும் முன்னரே அவர் இறந்து விட்டார். அவருடைய இழப்பு இன்றுவரை ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு தான். சரி, புரூஸ் லீயின் திறமைகளை எனக்கு தெரிந்த வகையில் கூற முயல்கிறேன்.
முக்கியமானது புரூஸ் லீயின் நேர்த்தியான நுட்பம். எந்த ஒரு நுட்பத்தை செய்தாலும் அதை மிக நேர்த்தியாக செய்யக்கூடியவர் புரூஸ்லி. நேர்த்தி என்றால் ஆங்கிலத்தில் பெர்பெக்ஷன் (perfection) என்று சொல்வார்கள். அந்த வார்த்தைக்கு உண்மையில் ஒரு முடிவே கிடையாது. அது சென்றுகொண்டே இருக்கும். இதுதான் கடைசி என்று சொல்லக்கூடிய ஒரு அடிப்படை அதற்குக் கிடையாது. நீங்கள் செய்ய செய்ய நீங்கள் செய்யும் நுட்பத்தின் நேர்த்தி வளர்ந்துகொண்டே இருக்கும். அதை புறவயமாக நம்மால் வார்த்தையால் சொல்ல முடியாவிட்டாலும் அகவயமாக நம்மால் கண்டிப்பாக உணர முடியும். அதை நிரம்பப் பெற்றவர் புரூஸ்லி. வீரக்கலை பயில்பவர்களுக்கு ஒன்று தெரியும் நாம் செய்யும் நுட்பத்தில் நேர்த்தி வந்தாலே வேகம் வந்துவிடும், ஏனென்றால் நேர்த்தி என்பதே எந்தவித வேறு வகையான அசைவுகள் இல்லாமல், செய்யும் தொழில்நுட்பத்தை நேராக அதனுடைய வழியில் சுருக்கமாக செய்வது என்று நாம் சொல்லலாம். அப்படி வந்து விட்டால் நிச்சயம் செய்ய செய்ய நுட்பத்தில் வேகம் கூடும் வேகமும் வந்தால் பலம் தன்னைப் போல் வந்துவிடும். அதன் காரணமாகவே புரூஸ் லீக்கு ஒரு அசுர பலம் அசாத்திய வேகமும் அவருடைய நுட்பத்தில் வந்து சேர்ந்துவிடுகிறது. அதற்கு முக்கியமான காரணம் அவருடைய நேர்த்தி என்றே சொல்லலாம். அந்த நேர்த்திக்கு காரணம் அவரின் அயராத பயிற்சி. அது மட்டுமல்லாமல் சினிமாவுலகில் சண்டைக்காட்சிகளில் உணர்வுகளை வெளிப் படுத்தியவர் அவர்தான். அவரளவுக்கு சீற்றம் கொண்டு சண்டையிடுவது மற்ற ஹீரோக்களுக்கு இயலாத ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. அந்த மன ஒருமையின் காரணமாக அந்த நுட்பத்தின் ஒவ்வொரு அசைவும் அவருடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும் குறிப்பாக என்டர் தி டிராகன் (Enter the dragon) என்ற திரைப்படத்தில் அவர் ஒரு வீரக்கலை போட்டியில் கலந்து கொண்டு செய்யும் ஒரு சண்டை. அந்த படத்தில் அது இரண்டாவது சண்டை. அதேபோல் இன்னொரு சண்டை பிஸ்ட் ஆப் பியூரி (Fist of fury) என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். அது அவர் ஒரு கராத்தே பள்ளிக்குள் சென்று அங்கு உள்ள மாணவர்களை அடிக்கும் ஒரு சண்டை காட்சி. அதை மிக அனாவசியமாக செய்து இருப்பார். கேமரா மேலே இருந்து எடுக்கப் பட்டிருக்கும் அந்த காட்சியில் அவர் சுற்றி சுற்றி அனைவரையும் அடிக்கும் விதம் அன்றைக்கு வெளிவந்த சண்டை படங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று சொல்லலாம். அந்த படத்தில் உள்ள அனைத்து சண்டை காட்சிகளும் படத்தின் தலைப்புக்கு ஏற்ப மிகுந்த சீற்றத்துடன் இருக்கும். ஒவ்வொரு படத்தை பற்றியும் அதில் உள்ள நுட்பங்களை பற்றியும் தனித்தனி கட்டுரைகளாவே எழுதலாம்.
குங்ஃபூ என்று சொல்லப்படும் சீன கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் புரூஸ் லீ தான். அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். ஆனால் மரபார்ந்த ஆசிரியர்களை தாண்டி சிந்தித்தது அவர் மனம், பல புதிய நுட்பங்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். அது மரபார்ந்த கலையாக மட்டுமே பார்க்கும் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு கசப்பாகவே இருந்தது. ஆனால் வளராமல் தேங்கி நிற்கும் ஒரு கலை சிறுகச்சிறுக அழியத் தொடங்கும் என்பதே உண்மை. பல தற்காப்பு கலைகளில் உள்ள பல சிறந்த நுட்பங்களை சேர்க்க நினைத்தார். அதற்காக அவர் உருவாக்கிய ஒரு வழிமுறைதான் ஜீட் குன் டோ (Jeet Kwon Do). இதை பொதுவாக எல்லோருமே ஒரு தனியான தற்காப்பு கலை என்று சொல்வார்கள். எனக்கு அப்படி சொல்வதில் உடன்பாடு இல்லை அதை ஒரு சண்டை செய்யும் முறை என்று தான் அவரே சொன்னார். அதாவது ஸ்டைல் ஆப் நோ ஸ்டைல் (Style of no style) என்பதுதான் ஜீட் குன் டோ வின் சண்டை செய்யும் முறையாக புரூஸ்லி சொல்லியிருந்தார். அதை ” முறைகளற்ற முறை” என்று சொல்லலாம். அதாவது நம்முடைய எதிரி எப்படி சண்டை செய்கிறாரோ அதை புரிந்து அதற்கேற்ற மாதிரி சண்டை செய்ய வேண்டும் என்பதே அதன் உட்கருத்து. ஒரு கலை என்றால் அதற்கென்று சில அடிப்படைகள் இருக்கும் பாடத்திட்டங்கள் இருக்கும் அதை ஒரு கலையாக செய்யக்கூடிய அதாவது மனம் ஒன்றி செய்யக்கூடிய பல நுட்பங்கள் வழிமுறைகளும் இருக்கும் ஆனால் புரூஸ்லி அவர்களின் ஜீட் குன் டோ என்பது கிட்டத்தட்ட பாக்ஸிங் போல ஒரு சண்டை செய்யும் முறை மட்டுமே. அதைத் தாண்டி அதில் பாடத்திட்டங்கள் என்று எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அந்த சண்டை செய்யும் முறை என்பது பாக்சிங், கராத்தே, குங்பூ போன்ற அனைத்து தற்காப்பு முறைகளிலிருந்து சிறந்த நுட்பங்களை எடுத்துக்கொண்டு உருவாக்கியது. ஆனாலும் அவர் எப்போதும் தன்னை ஒரு குங்பூ ஆசிரியராகவே முன்வைத்தார். அதை அவர் குங்பூ மற்றும் கராத்தேவை ஒப்பிட்டு குங்பூ குத்துக்கும் கராத்தே குத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு காணொளியில் பேசி இருப்பதன் மூலம் அறியலாம். அவர் தான் கண்டு உணரும் சிறந்த நுட்பங்களை, மற்ற கலைகளில் உள்ள புதுமைகளை குங் பூவில் இணைத்து கொண்டு அந்த கலையை வேறு ஒரு பரிமானத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார். அவர் செய்த ஒரு கையில் அதுவும் மூன்று விரலில் தண்டால் எடுப்பது, 1 இன்ச் பஞ்ச் போன்ற விஷயங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இன்றும் அந்த வீடியோக்கள் யூடியூபில் கிடைக்கிறது.
இராமாயண வாலிக்கு தன் எதிரில் நின்று சண்டை செய்பவரின் பாதி பலம் அவருக்கு வந்து விடும் என்ற வரம் உள்ளது போல் புரூஸ்லீ போல தன்னபிக்கையும் மன ஒருமையும் உள்ளவர் முன் அவர் அளவுக்கவே பயிர்ச்சி உள்ளவர் மட்டும் நிற்க முடியும், இல்லையென்றால் எதிரில் நிற்பவர் விழிகளை பார்த்த உடனே தன் பலத்தில் பாதியை இழந்து விடுவார்கள்.
வாலி என்ற கதாபாத்திரமோ அல்லது டிராகன் எனும் சீன கற்பனை விலங்கோ வாழ்ந்ததா தெரியாது. ஆனால் தன்னை லிட்டில் டிராகன் என அழைத்துக்கொள்ள ஆசைப்பட்ட புரூஸ் லீ வாழ்ந்தார். ஆம் இன்றளவும் வீரக்கலை உலகில் அவர் ஒரு டிராகன் தான்.