சிலம்பத்தின்-சிறப்புகள்
To read this article in English click here https://jrkanth.com/2020/12/29/silambams-specialty/
உலகமெங்கும் கம்பை வைத்து செய்யப்படும் தற்காப்பு கலைகள் பரவலாக இருந்தாலும், தமிழர் தற்காப்பு கலையான சிலம்ப கலை தனிச்சிறப்பு வாய்ந்த கலை என்பது உண்மை.
ஒரு கம்பை வைத்துக்கொண்டு சண்டை செய்வது பற்றியோ அல்லது தன்னை தற்காத்து கொள்வது பற்றி உலகில் உள்ள யார் சிந்தித்தாலும் அடிப்படையில் சில அசைவுகள் மற்றும் வீச்சுகள் உருவாகி வரும். உதாரணத்திற்கு ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கை , கால்கள் மற்றும் உடலினை பயன்படுத்தி செய்யும் கலைகளான குத்துவரிசை, கராத்தே , குங் பூ என்று எடுத்துக்கொண்டால் அதில் உள்ள குத்து, வெட்டு, உதைகள், தடைகள் போன்ற நுட்பங்களில் பல ஒற்றுமைகளை காணலாம். அது போல் கம்பை கொண்டு செய்யும் பல கலைகளிலும் சில ஒற்றுமைகளை காண முடியும். வாரல், வெட்டு, குத்து போன்ற அடிப்படை நுட்பங்களை அப்படி சொல்லலாம். சரி அப்படி என்றால் சிலம்பக்கலை மற்ற கம்பை கொண்டு செய்யும் கலைகளை விட எந்த வகையில் சிறந்தது?
- அதன் வீச்சு முறை
- அதன் தனித்தன்மையான கால் மான முறைகள்
- எந்த திசைக்கும் கம்பை லாவகமாக திருப்ப கூடிய அதன் பயிற்சி முறைகள்
- அதன் பல்வேறு வகையான அடிப்படை நுட்பங்கள்
- நுட்பங்களை தாண்டி உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை
- அதன் செவ்வியல் தன்மை.
1. வீச்சுமுறைகள்:
பொதுவாக மற்ற கலைகளில் உள்ள பாடங்கள் மற்றும் சண்டை செய்யும் முறைகளில் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை மட்டும் சமாளிக்கும் முறையில் வடிவமைக்க பட்டிருக்கும் மேலதிகமாக இடது பக்கம் மற்றும் வலது பக்கம் அல்லது முன் மற்றும் பின்னால் உள்ள எதிரிகள் என இருவரை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் சிலம்பத்தில் பல வீச்சு முறைகள் உள்ளன, அது தன் முன்னாள் உள்ள அனைவரையும் அல்லது தன்னை சுற்றி உள்ள அனைவரையும் தன்னிடம் நெருங்க முடியாத வண்ணம் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு ‘கலைப்பு’ என்ற நுட்பம் தன் முன்னால் உள்ளவர்களையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் கலைக்கும் ஒரு சிறந்த நுட்ப முறை. வாரல் என்ற அடிப்படை நுட்பத்தை வேறு திசை மற்றும் வேறு கோணத்தில் செய்யப்படும் இந்த ‘கலைப்பு’ வேறு கலைகளில் காண முடியாது. இதே “கலைப்பு” நுட்பத்தை சுத்து கால் முறையில் நின்றுகொண்டு 360 டிகிரி சுற்றிப் செய்யும் முறையும் சிலம்பத்தில் சிறப்புகளில் ஒன்று. அதே போன்று இன்னொரு சிறந்த நுட்பம் தான் ‘வீடு கட்டுதல்’.
2.கால் மான முறைகள்:
பொதுவாக தமிழர்கள் தான் சண்டையில் வல்லவன் என்று சொல்வதற்கு பல சொல் ஆக்கங்களை பயன்படுத்துவார்கள். அதில் முக்கியமான ஒன்று, நான் வீடு கட்டி அடிப்பேன் என்று சொல்வது. ஆம் அந்த வார்த்தை சிலம்ப கலையில் இருந்து உருவாகி வந்தது தான். 2 வீடு, 4வீடு, 16வீடு என்று சொல்வதெல்லாம் சிலம்ப கலையில் உள்ள அதன் தனித்துவமான அதன் கால் மான முறைகளை வைத்து தான். நான் முன்னரே சொன்ன ‘வாரல்’ என்ற நுட்பம் ஒரு அருமையான தற்காப்பு நுட்பம். நாம் எந்த திசையில் வீசினாலும் அந்த திசையில் வரும் எல்லா வகையான தாக்கும் முறைகளை இது தடுக்கும் (எவ்வளவு வேகத்தில் மற்றும் எவ்வளவு பலமாக வீசுகிறோம் என்பது அவரவர் பயிற்சியை பொறுத்தது). இந்த ‘வாரல்’ நுட்பம் தான் வீடு கட்டும் கால் மாணத்தில் மிக அதிகமாக செய்யப்படும் நுட்பம். கால்களை ‘X’ வடிவத்தில் இங்கும் அங்குமாக திரும்பி செய்யப்படும் இந்த நுட்பத்தில் இந்த ‘வாரல்” நுட்பம் வீச்சாக மாறி அதன் பலத்தை மற்றும் வேகத்தை பெருக்கி கொள்ளும். நான்கு வீடு நான்கு (16வீடு) என்று சொல்லப்படும் நுட்பம் நம்மை 4 திசைகளில் இருக்கும் எதிரிகளிடம் இருந்து காக்கும். இந்த நுட்பமும் மற்ற கலைகளில் இல்லாதது. அதே போல் “உடான்”, “கிரிக்கி”, “துள்ளி வருதல்” போன்ற நுட்பங்களில் உள்ள கால் மான முறைகளும் மற்ற கலைகளில் இல்லாத ஒன்று.
3.கம்பை லாவகமாக திருப்ப கூடிய முறைகள்:
பொதுவாக கம்பை முன்னும் பின்னுமாக, இரண்டு திசைகளுக்கு மட்டும் மாற்றி செய்யப்படும் பாடங்கள் தான் பெரும்பாலும் கம்பை வைத்து செய்யப்படும் கலைகளில் உள்ளன. ஆனால் கம்பை ஒரு திசையில் இருந்து வேறு எந்த திசைக்கும் மாற்றும் லாவகம் சிலம்ப கலையில் மட்டும் தான் உள்ளது என்று நினைக்கிறன். உலகில் புகழ்பெற்ற ஜப்பானிய மற்றும் சீன கலைகளில் கூட அப்படி மாற்றும் ஒரு அசைவை எந்த ஒரு உலக போட்டிகளிலும் கண்டதில்லை (இணையத்தில் பார்த்தவை மட்டும்). அவர்களில் ஜிம்நாஸ்டிக்ஸ் மற்றும் தாவி எழும்பும் அசைவுகள் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும்.ஆனால் கம்பை அதன் குறைந்தபட்ச வீச்சு உள்ள இடத்தில் அதன் திசையை மாற்றி லாவகமாக செய்வது சிலம்ப கலையின் அடிப்படை பயிற்சி முறைகளில் ஒன்று. மற்ற கலைகளில் கம்பை அப்படி வேறு திசைகளுக்கு மாற்றுவது என்றாலும் அதன் அசைவை ஏதேனும் ஒரு நுட்பத்தில் நிறுத்தி பின்னர் வேறு திசைக்கு திரும்பி செய்வது போன்ற பாட முறையில் தான் உள்ளது.கம்பின் அசைவை நிறுத்தாமல் அதன் போக்கிலேயே வேறு திசைக்கு மாற்றும் நுட்பம் சிலம்ப கலையின் சிறப்பு என்றே கருதுகிறேன். இந்தியாவில் கம்பை வைத்து செய்யப்படும் பிற கலைகளான “கத்தி சமு” அல்லது ‘கார சமு” (ஆந்திரா) என்று சொல்லப்படும் கலையாக இருந்தாலும் சரி, “லத்தி கேளா” என்று வங்காளத்தில் செய்யப்படும் கலையாக இருந்தாலும் சரி சிலம்ப கலை அளவிற்கு முழுமை பெறாததாகவே உள்ளது. குறைந்த பட்சம் நான்கு வீடு நான்கு கூட அவர்கள் செய்யதில்லை. அதிகபட்சம் 2 அல்லது 3 திசைகள் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். மேலும் அந்த கலைகளில் நெடுங்கம்பை விட அலங்கார கலை என்று சொல்லப்படும் நடுக்கம்பு அதிகமாக செய்யப்படுகிறது.
4.பல்வேறு வகையான அடிப்படை நுட்பங்கள்:
“வாரல்” “வெட்டு” என்ற அடிப்படை நுட்பங்கள் எல்லா கலைகளுக்கும் பொதுவானவை. ஆனால் “பகுல் – வலது / இடது”, “கிரிக்கி”, “கலைப்பு”, “தலை மானம்”, “துள்ளி வருதல்”, “மேல் வீச்சு”, “கீழ் வீச்சு” போன்ற அடிப்படை நுட்பங்கள் சிலம்ப கலையில் மட்டுமே உள்ளன. “மேல் வீச்சு”, கீழ் வீச்சு” என்பது “வாரல்”, “வெட்டு” போல் தோள்களுக்கு நெருக்கமாக வீசாமல் அகன்று வீச கூடியது. குறிப்பாக வீச்சு முறைகளிலும் நாகம் 16 பாட வகைகளில் அதிகமாக வர கூடியது.
5.உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை
பொதுவாக எந்த வீர கலையிலும் உணர்வுகளை முகத்திலோ அல்லது உடல் மொழியிலோ வெளிப்படுத்தும் தன்மைகள் இருக்காது. அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது எதிரி நம் மனநிலையை அறிந்து விட கூடும் என்பது தான். அது ஒரு வகையில் உண்மை தான். ஆனால் திறம்பட பயிற்சி செய்த ஒருவரின் தன்னம்பிக்கையை அவரின் கண்களிலும், உடல் அசைவிலும் இயல்பாகவே கண்டு கொள்ளமுடியும். இராமாயணத்தில் வாலிக்கு தன் எதிரே நின்று சண்டையிடும் நபரின் பாதி பலம் வந்துவிடும் என்று ஒரு வரம் உள்ளதாக சொல்வார்கள். அப்படி ஒரு வரம் வாலிக்கு உண்மையிலேயே இருந்ததா என்று தெரியாது ஆனால் உண்மையிலேயே நன்றாக பயிற்சி செய்த ஒரு வீரன் முன் நின்றால் அவரின் தன்னம்பிக்கையும், அசைவுகளும் எதிரே நிற்பவர் மனதில் ஒரு பயத்தை உண்டாக்கும் அந்த பயம் அவருடைய பாதி திறமையை குறைத்து விடும் என்பது உண்மை. அந்தவகையில் சிலம்பக் கலையில் அப்படி பயிற்சி செய்தவரின் அளவை காட்டுவதற்கு என்றே இருப்பது தான் சிலம்பத்தில் உள்ள “பாவ்லா” முறை. சண்டை போட இருக்கும் இரண்டு நபர்களும் ஒரு முழு வட்டம் அடித்து இந்த “பாவ்லா” செய்வதை ஒரு மரபாகவே பயிற்சி செய்வார்கள். இதை தாண்டி தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்த அல்லது எதிரியை மிரள வைக்க தொடை தட்டி செய்வது, முண்டா அடிப்பது, சண்டையின் நடுவிலே கூட தன் உடலின் ஏதேனும் ஒரு பாகத்தில் தட்டி சத்தம் எழுப்பி எதிரியை குழப்புவது, சட்டென்று துள்ளி முன் செல்வது, “சறுக்கி” நுட்பத்தில் இறங்கி உடனே முன் எழுவது என பல நுணுக்கங்கள் உண்டு.
6.செவ்வியல் தன்மை
பொதுவாகவே வீரக் கலையின் பாட முறைகள் அனைத்துமே கற்பனை சண்டைதான். ஒவ்வொரு திசையிலும் நம்மை தாக்க வருபவர் இப்படி அடிக்கிறார், அதை எப்படி எங்கு தடுக்கிறோம் மீண்டும் நாம் எப்படி தாக்குகிறோம் என்று அடிபடையில் தான் அனைத்து பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கற்பனைகளை அடிப்படையாக வைத்துதான் ஒவ்வொரு ஆசிரியரும் தன் கற்பனைக்கு ஏற்றபடி பாடத்தில் மாற்றம் செய்கின்றனர். அதேபோல் சிலம்ப கலையில் உள்ள பாடங்களும் கற்பனை திறன் கொண்டவை அந்தப் பாடங்களில் உள்ள எண்ணற்ற சாத்தியங்கள், அதை ஒவ்வொரு ஆசிரியரும் மேலும் மேலும் மெருகேற்றி தன் மாணவர்களை கொண்டு வெவ்வேறு முறையில் பயிற்சி அளிக்கின்றனர். ஆனால் அப்படி மாற்றப்படும்போது நம் விருப்பப்படி கண்டபடி மாற்ற முடியாது தற்காப்பின் அடிப்படைகளைக் கொண்டு நாம் மாற்றும் பாடம் அடிப்படை மாணவர்கள் பயிற்சி செய்யும் பாடமா அல்லது முதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பயிற்சி செய்யும் பாடமா என்பதைக் கொண்டு அதற்கேற்றபடி மாற்றப்படும். அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ஒரு மேம்படுத்தப்பட்ட பாடத்தை எல்லோரும் பார்த்து ரசிக்க முடியாது. பொதுவாக பொதுமக்கள் சிலம்பக்கலை செய்யும் போது அதன் வேகம் மற்றும் வீச்சு முறையை பார்த்த பிரமிப்பு அடைவர். ஆனால் அந்த கலையை சற்றேனும் அறிந்தவர் தான் அந்தப் பாடத்தில் உள்ள நுணுக்கங்களை ரசிக்க முடியும் ஒருவர் செய்வதற்கும் மற்றவர் செய்வதற்கும், யார் அந்தப் பாடத்தில் கவனத்தை ஊன்றி எதிரியை உணர்ந்து நிஜமாகவே அங்கே ஒரு சண்டை நடப்பது போல உணர்ந்து செய்கிறார் என்பதை பார்க்க தெரிந்தால் மட்டுமே ரசிக்க முடியும். இந்த சாத்தியங்களால் தான் இது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. ஆனால் பொதுவாக சிலம்பத்தின் அடிப்படைகள் ஒன்றுதான் ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும், தன் கற்பனைக்கு ஏற்ப குறவஞ்சி, சார்பட்டா, நாகம் 16, கதம்பம், கள்ளபத்து என பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலம்பத்தில் உள்ள பரந்த அடிப்படை நுட்பங்களும் அதை பல விதங்களில் இணைக்கும் அதன் எண்ணற்ற சாத்தியங்களும் அதன் அடிப்படையில் உருவான பல பரிமாணங்களும் தான் இந்த கலையை தொன்றுதொட்டு இன்றுவரை அழியாமல் காத்து நிற்கிறது, இனி மேலும் காத்து நிற்கும் என்றே சொல்லலாம்.
Pingback: Silambam’s Specialty | ரஜினிகாந்த் ஜெயராமன்